தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டம்


தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டம்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்தின் கீழ் தொழில் முனைவோர் சிறப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை

தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்தின் கீழ் தொழில் முனைவோர் சிறப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு திட்டம்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

உணவுப்பதப்படுத்தல், ஆயத்த ஆடைகள் தைத்தல், செங்கல், கயிறு மற்றும் கயிறு நார் சார்ந்த பொருட்கள், மளிகைக்கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக்கூடம் உள்பட பல்வேறு தொழில் திட்டங்களுக்கு உதவி வழங்கப்படும்.

மானியம் மொத்த திட்ட தொகையில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடி. இதுமட்டுமின்றி கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியும், ஆர்வமும் கொண்ட எஸ்.சி. மற்றும் எஸ்.டி. தொழில் முனைவோர் இ்ந்த வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04575-240257, 89255 33989 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story