தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்ட அறிமுக கூட்டம்
ராணிப்பேட்டையில் தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்ட அறிமுக கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.
சிறப்புதிட்ட அறிமுக கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்ட தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கான தனி சிறப்பு திட்ட அறிமுக கூட்டம் நடந்தது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மானியம்
தமிழ்நாடு அரசு எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவுத் தொழில்முனைவோர்க்கு என பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் - பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் மானியம் வழங்கப்படும்.
உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார் தொழில் திட்டங்கள், உணவுப்பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தைத்தல், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி, ஹாலோ பிளாக், சாலிட் பிளாக், பல்பொருள் அங்காடி, வணிகப்பொருட்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், கழிவு மேலாண்மை, பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி உள்ளிட்டவை இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வகுப்புச் சான்றிதழ், விலைப்புள்ளி திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், மண்டல மேலாளர் பிரசன்ன குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், மாவட்ட மேலாளர் தாட்கோ அமுதா ராஜ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.