ஆடி 3-வது வெள்ளிக்கிழமை:சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் தரிசனம்


ஆடி 3-வது வெள்ளிக்கிழமை:சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் தரிசனம்
x
சேலம்

சேலம்

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி 3-வது வெள்ளி

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன், காளிம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடந்த சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்பு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். சேலம் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

வளையல் அலங்காரம்

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், கோவில் உள்பிரகாரம் முழுவதும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் அஸ்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதேபோல், சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு முத்தங்கி மற்றும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. காளியம்மனுக்கு பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு அலங்காரமும், மாரியம்மனுக்கு பாலாம்பிகை அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது

1,008 வெற்றிலை பாக்குடன்

சேலம் நெத்திமேடு கொடம்பைக்காடு மகா காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 1,008 வெற்றிலை பாக்குடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பவள கற்கள் அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.

இதேபோல், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நான்காம் நாள் உற்சவத்தில் தோணியப்பருடன் பெரியநாயகி அம்மன் அலங்காரம் செய்து திருவீதி உலா நடந்தது. அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மனுக்கு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story