ஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

ஆடி கிருத்திகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், ராட்சத கிரேனில் தொங்கியவாறும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன.

வேல்முருகன் கோவில்

இதே போல், சந்தூர் மாங்கனி மலையில், வள்ளி தெய்வசேனா சமேத வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தன. நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவையொட்டி சிலம்பாட்டம், காவடி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று ஆடி கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) சாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் பேருஅள்ளி காவாக்கரை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் 30 அடி 50 அடி முதல் அழகு குத்தியும், எலுமிச்சம்பழம் உடம்பில் குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பர்கூர்

பர்கூர் ஜெகதேவி ரோட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 7-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர், பாலமுருகன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் 20 அடி உயரம், 30 அடி நீளம் கொண்ட பரண் அமைத்து பக்தரின் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அவர் முதுகில் அலகு குத்தி பறந்து சென்று சாமிக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காட்டியும், குழந்தைகளை கையில் ஏந்தி சென்று வழிபட்டார். பின்னர் இடித்த மஞ்சளை அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story