ஆடி அமாவாசையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி
ஆடி அமாவாசையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.
தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராசுவீதி, சேலம் சாலை, ரவுண்டானா வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமயபுரத்து மாரியம்மன்
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதே போல மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.