பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை


நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பிரசன்ன வெங்கட்ரமணசாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், பரமத்தியில் எழுந்தருளியுள்ள கோதண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதேபோல் மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து புஷ்பங்கி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story