கம்பம் கன்னிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
கம்பம் கன்னிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற கன்னிமார் மற்றும் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கம்பத்தை சேர்ந்த ஒக்கலிகர் சமூகத்தினர் சார்பில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அப்போது பொங்கல் வைத்து, கிடாவெட்டி, அன்னதானம் நடைபெறும்.
இந்தநிலையில் அந்த கோவிலில் இன்று மழை வேண்டி பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி பாரம்பரிய முறைப்படி குலாலர் சமூகத்தினர் வீட்டில் இருந்து சாமி புறப்பாடு தொடங்கியது. அதன்பிறகு ஆலமரத்துக்குளம், கும்பபுளி, ஏகலூத்து, பந்தல்கரை, எல்லைக்கரை உள்ளிட்ட பகுதிகள் வழியாக கன்னிமார் கோவிலுக்கு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
அதன்பிறகு கோவிலில் 7 கன்னிமார் தெய்வங்கள் மற்றும் கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கருப்பசாமிக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.