பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு பூஜை

ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு கடந்த 24-ந்தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் அருகே உள்ள சவுமிய நாராயண பெருமாள் கோவில், காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவில், சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று 3-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டியும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பத்தூர் அருகே சிவகங்கை, சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவையொட்டி கோவிலில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் தரிசனம்

காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கட முடையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலமேலு மங்கை தாயாருடன் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண மண்டபத்தில் ரத்தினஅங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலாண்டு தேர்வு முடிந்து இந்த வாரம் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராம வெங்கடாச்சலம் செட்டியார், கோவில் செயல் அலுவலர் பாலசரவணன் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதேபோல திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில், சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில், விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி அரியக்குடி, திருக்கோஷ்டியூர் ஆகிய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


Next Story