முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூச திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான தைப்பூச திருநாளான நேற்று அதிகாலை முதல் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கிருஷ்ணகிரி நகரில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள், இயக்கப்பட்டன. மேலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கெலமங்கலம்- ஊத்தங்கரை

கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள முருகருக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஊத்தங்கரை அருகே கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடத்தி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து சாமியை வழிபட்டனர்.

ஓசூர்-ஜெகதேவி

ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதேபோல நெசவுதெரு சோமேஸ்வரர் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. பர்கூர் ஜெகதேவி ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன் கோவிலில தைப்பூசத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.

அதேபோல ராயக்கோட்டை அருகே முத்தம்பட்டி முருகன் கோவில், உடையாண்டஅள்ளி முருகன் கோவில், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்தத்தில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள காரக்குப்பம் பச்சைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதலே முருகன், வள்ளி தெய்வானை சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தீர்த்தம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. எடரபள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story