கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

ஆடி மாத பவுர்ணமி

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை மங்கள இசையும், பக்தர்கள் காவிரி ஆற்றிக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து தீர்த்தங்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து புனித நீரை 9 கலசங்களில் வைத்து பொன்னாச்சி அம்மனுக்கு மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் யாக வேள்வியும், பொன்னாச்சி அம்மனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் ஆடி மாத பவுர்ணமியையொட்டி நன்செய் இடையாறு மாரியம்மன், அழகு நாச்சியம்மன், வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன் மற்றும் பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.

ஜெயதுர்கா யாகம்

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மனுக்கு ஆடி மாத பவுர்ணமியையொட்டி ஜெய துர்கா யாகம் நடைபெற்றது. காலை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி மதியம் மங்கள மகா யாகம், மாலை 108 லிட்டர் பால், தயிர், கரும்பு சாறு உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலசாபிஷேகம், த்ரிசதி அர்ச்சனை நடைபெற்று. பின்னர் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து அன்னப்படையில் வைத்து விசேஷ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன் கோவில், சீராப்பள்ளி செவ்வந்திஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடி பவுர்ணமியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story