சிவராத்திரியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


நாமக்கல் மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

மகா சிவராத்திரி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2-ம் கால பூஜை, அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை 3-ம் கால பூஜை, அதிகாலை 4½ மணி முதல் காலை 6.30 மணி வரை 4-ம் கால பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி சாமிக்கு வில்வ இலை மற்றும் தாமரை பூவால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதேபோல் நாமக்கல் தட்டாரத்தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் கோவில், செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆண்டாபுரம் காசி விசுவநாதர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சனி பிரதோஷம்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் மாசி மாத சனி பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் மாசி மாத சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் பக்தர்களும், பொதுமக்களும் சனிப்பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அசலதீபேஸ்வரர்

மோகனூர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு, பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, மஞ்சள் நீர் திருமஞ்சனம், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. அசலதீபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதேபோல் மனப்படியில் உள்ள பீமேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காசி விஸ்வேஸ்வரர்

இதேபோல் நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று சாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்கரிக்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பக்தர்கள் தீ மிதி விழா நடைபெறுகிறது.

பள்ளிபாளையம் அக்ரகாரம் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வேஸ்வரர் விசாலாட்சி திருக்கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முதல் கால பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவபெருமானை போற்றி பாடல்கள் பக்தர்களால் பாடப்பட்டது.

108 சிவலிங்க பூஜை

மோகனூர் ஒன்றிய பகுதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில், நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடந்தது. அதற்காக, பக்தர்கள் இரவுகளில் சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடந்த பூஜைகளில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு சிவாலயங்களிலும், வெவ்வேறு நேரங்களில் ஜாம பூஜைகள் நடத்தப்பட்டது. மோகனூர் மதுகரவேணி அம்மாள் சமேத அசலதீபேஸ்வரர் கோவிலில், இரவு 7 மணி, 10 மணி, அதிகாலை, 1 மணி, 4 மணி என நான்கு கால பூஜை நடைபெற்றது. மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் கோவில் வளாகத்தில் 108 சிவலிங்க பூஜை நடைபெற்றது. வாழை இலையில், சிவலிங்கம் வைத்து, வெற்றிலை பாக்கு, பச்சரிசி, மஞ்சள், பூக்கள், வைத்து தீபம் ஏற்றி மந்திரங்கள் சொல்லி பக்தர்கள் சாமி வழி பெற்றனர். தொடர்ந்து இரவு 9 மணி, நள்ளிரவு 12, அதிகாலை 3, காலை 6 மணி என 4 கால பூஜை நடைபெற்றது. சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள்

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி வரதராஜபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி கோவிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story