கோவில்களில் சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவை
தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நேற்று தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை, அலங்காரம், வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு உள்பட 9வகையான 2 டன் பழங்களை கொண்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மருதமலை கோவில்
இந்த கோவிலில் நடை திறந்ததும் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம்
காலை 6 மணிக்கு கோ பூஜை, ஆதி மூலஸ்தானத்தில் உள்ள முருகன் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணி அளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வந்தார்.
இதேபோன்று இடும்பன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அங்குள்ள அனுமன் மற்றும் மருதமரத்தார் மருந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தமிழ் புத்தாண்டையொட்டி மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. எனினும் மினி பஸ்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் திரளான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் உள்பட கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரூ.6 கோடியில் அலங்காரம்
தமிழ் புத்தாண்டையொட்டி கோவை காட்டூரில் உள்ள அம்பிகை முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகள், தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் என்று ரூ.6 கோடி மதிப்பில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
டி.கே.மார்க்கெட் பிளேக் மாரியம்மன் கோவிலில் அம்மன் தங்க அலங்காரத்திலும், பெரியகடைவீதி மாகாளியம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்திலும், பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.