சனி பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை


நாமக்கல் மாவட்டத்தில் சனி பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

சனி பிரதோஷம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நாமக்கல் தட்டார தெருவில் அமைந்துள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் சிவன் மற்றும் லிங்கத்திற்கு பால், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள சர்கார் பழையபாளையம் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில், வள்ளிபுரம் ஈஸ்வரன் கோவில், புத்தூர் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஏகாம்பரேஸ்வரர்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வளர்பிறை சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் வளர்பிறை சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. இதில் எல்லையம்மன் கோவிலில் மார்க்கண்டேயனுக்கு அருள்வதற்காக எமதர்மனை வதம் செய்த அலங்காரத்தில் ஏகாம்பரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சனி பிரதோஷ விழாவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நந்தி பகவான்

மோகனூரில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷத்தையொட்டி பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், பன்னீர். உட்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி கோவில் வளாகத்தில் திரு சுற்றும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு

இதேபோல் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன், காமாட்சி அம்மன், சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவில், ஒடுவன் குறிச்சி காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமிகள் அலங்கரிக்கபபட்டு ஆராதனை நடைபெற்றது. இதேபோல் முள்ளுக்குறிச்சி, மங்களபுரம் உள்பட பல்வேறு கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காசி விஸ்வேஸ்வரர்

பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வேஸ்வரர் விசாலாட்சி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் நந்தி மீது சிவன் விசாலாட்சி அமர்ந்தபடி கோவிலை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story