அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
கிருஷ்ணகிரியில் ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜைகள்
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை விசேஷ நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் முன்னோர்களையும் இறந்த தாய், தந்தையர்களை நினைத்து 'திதி' கொடுப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, முதியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் வழக்கம். மேலும் ஆடி அமாவாசையில் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெரு முத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதே போல தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் திதி கொடுத்து தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தன.
பட்டாளம்மன் கோவில்
கெலமங்கலத்தில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் மாரியம்மனுக்கு பூ அலங்காரம் செய்து பல்லக்கில் அமர்த்தி தீப ஆராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் அழகுகுத்தி, தீச்சட்டி, கஞ்சி செட்டி, மற்றும் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
அம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கி நகர முக்கிய வீதிகளான கணேச காலனி முதல் கூட்ரோடு வரை சென்று அண்ணாநகர் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதேபோல் அண்ணா நகர் முருகன் கோவில் பக்தர்கள் முதுகில் அழகு குத்தியபடி எஸ்கார்ட் எந்திரத்தில் சத்ரபதிசிவாஜி உருவப்படத்தை வைத்து தொங்கிக் கொண்டே நேர்த்தி கடனை செலுத்தினர். நகர முக்கிய வீதிகளில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டு சென்றனர். கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியை கவனித்தனர்.