பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி,
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை
புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு விசேஷ தினமாக உள்ளதால் அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி சிவகங்கை, காரைக்குடி, திருக்கோஷ்டியூர், அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
உற்சவர் சவுமிய நாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி மஞ்சள் பட்டு உடுத்தி மலையப்பன் அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி அருகே அரியக்குடியில் பிரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அலமேலுமங்கை தாயாருடன் தங்க அங்கியில் காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாள் திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளித்தார். சிவகங்கை சுந்தரராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.