கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை
நாமக்கல்லில் காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
ரூ.1.95 கோடி இலக்கு
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியமானது, கிராமப்புற ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2022-2023-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே நடப்பாண்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பிலான கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கு எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி விற்பனை
அதேபோல் கதர் விற்பனையை ஊக்கப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30%-ம், சில பட்டு ரகங்களுக்கு 50%-ம் மத்திய, மாநில அரசுகளால் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனிடையே நாமக்கல் பஸ் நிலையம் அருகே கதர் விற்பனை அங்காடியில் நேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு கதர் மற்றும் கிராம பொருள் ரகங்களுக்கான சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
முன்னதாக காந்தி ஜெயந்தியையொட்டி அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் உமா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கதர் அங்காடியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி புடவைகளை அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, உதவி இயக்குனர் (கைத்தறி) அருள், கதரங்காடி மேலாளர் தாராசவுத்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.