தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை பெற சிறப்பு சேவை

தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் புதிய ஆதார் அட்டை பெற சிறப்பு சேவை முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆதார் அட்டை
தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் அட்டை புதிதாக எடுக்க விரும்புபவர்கள் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு சேவை வழங்கப்படுகிறது. புதிய ஆதார் அட்டை பதிவுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் பாலின திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிம அட்டை, போட்டோ ஒட்டப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது, சொத்து வரி ரசீது, வீட்டு வரி ரசீது, கியாஸ் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் 5 மற்றும் 15 வயதிலும் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கு 7 வயது மற்றும் 17 வயது வரை மட்டுமே கட்டணம் ஏதும் இன்றி புதுப்பிக்க முடியும். 7 மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
புதுப்பித்தல் அவசியம்
ஆதார் அட்டை பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்கள் அடையாள சான்று, முகவரி உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பதை அவசியமாக்கும் வகையில் ஆதார் ஒழுங்கு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ளது. இந்த வசதியையும் தபால் அலுவலகத்தில் பெற்று பயனடையலாம்.
இது தவிர பாரூர், பொம்மிடி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம், கடத்தூர், கம்பைநல்லூர், குமாரசாமிபேட்டை, மாரண்டஅள்ளி, மொரப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பெரியானஅள்ளி, தீர்த்தமலை ஆகிய துணை தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.