சிறப்பு ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும்


சிறப்பு ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோவையில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை

தனியார் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோவையில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை தடாகம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் என 12,631 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தினை புதுப்பிக்க வேண்டும். இதனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக அங்கீகார சான்றுகளை புதுப்பித்து ஆணை வழங்கப்படுகிறது.

சிறப்பு ஆசிரியர்கள்

தனியார் பள்ளிகளில் நமது தாய்மொழியான தமிழ் மொழியை கற்றுத்தர சிறப்பு ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தெளிவாக வாசிக்க வேண்டும் என்பதற்காக 'ரீடு மாரத்தான்' செயலி கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) கீதா, முதன்மை கல்வி அதிகாரி சுமதி, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய வகுப்பறைகள்

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளியாக இருந்தாலும் அங்கு தமிழ் கற்றுத் தரப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம். நம் தாய்மொழியான தமிழை அனைத்து மாணவர்களும் எழுத படிக்க வேண்டும் என்று பல்வேறு வசதிகளை செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் 185 ஊராட்சிகளில் தொடக்க நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு வங்கி நிதிக்காக காத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கிருந்த ஆசிரியைகளுடன் கலந்துரையாடினார்.


Next Story