தனியார் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்,சீர்காழி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் வாணவெடி தயாரிப்பு நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சீனிவாசன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், குத்தாலம் மற்றும் சீர்காழி தாசில்தார்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் குத்தாலம் அருகில் உள்ள 3 தனியார் வாணவெடி தயாரிப்பு நிறுவனத்திலும், சீர்காழியில் உள்ள ஒரு வாணவெடி தயாரிப்பு நிறுவனத்திலும் ஆய்வு செய்தனர். ஆய்வில் வாணவெடி தயாரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே வெடிமருந்து வைக்கப்பட்டுள்ளதா?, அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா?, இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் வெடிதயாரிப்பு நிறுவனங்களில் பயிற்சிபெற்ற பணியாளர்கள் பணிபுரிகிறார்களா?, மாவட்ட நிர்வாகத்தின் உரிமம் பெற்றுள்ளார்களா?, கொத்தடிமை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா? என்பதையும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.