நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெறும் சூரசம்ஹார விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்வார்கள். இதற்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது. ரெயில் (எண் 06910) திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 10-30 மணிக்கு வந்து சேருகிறது.
ரெயில் எண் 06909- நெல்லையில் இருந்து இரவு 11-05 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு நள்ளிரவு 12-30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.