சிறப்பு ரெயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும்
கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று பாலக்காடு கோட்ட மேலாளரிடம், பயணிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி
கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று பாலக்காடு கோட்ட மேலாளரிடம், பயணிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
உள்கட்டமைப்பு வசதி
பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் ஆனைமலை ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் நேற்று முன்தினம் பாலக்காடு ரெயில்வே கோட்ட மேலாளர் மற்றும் வணிக மேலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை ரோடு ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் கோவை வழித்தடங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
வேகம் அதிகரிப்பு
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தின் குறைந்தபட்ச வேகத்தை 110 கிலோ மீட்டராக அதிகரிக்க வேண்டும். மேலும் பொள்ளாச்சி-கோவை இடையே பயண நேரத்தை 45 நிமிடங்களாக குறைத்து சனிக்கிழமை மாலையும் கோவை-பொள்ளாச்சி இடையே ரெயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து சிறப்பு ரெயில்களையும் நிரந்தரமாக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து அல்லது கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை தாம்பரம், எழும்பூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் பிற டெல்டா மாவட்டங்களுக்கு திண்டுக்கல் வழியாக தினசரி ரெயில் இயக்க வேண்டும். ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் பாலக்காடு, சென்னை விரைவு ரெயில்கள் மற்றும் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகியவை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.