சேலத்தில் ஆடிப்பெருக்கையொட்டிஅம்மன், முனியப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சேலத்தில் ஆடிப்பெருக்கையொட்டிஅம்மன், முனியப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
சேலம்

சேலம்

ஆடிப்பெருக்கையொட்டி சேலத்தில் உள்ள அம்மன், முனியப்பன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் மாதம் முடியும் வரை அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக ஆடி முதல் தேதி, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதேபோல், ஆடிப்பெருக்கு அன்றும் (ஆடி-18) கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அந்த வகையில் சேலத்தில் நேற்று ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மன், முனியப்பன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோட்டை மாரியம்மன்

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதேசமயம், ஆடிப்பெருக்கையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம் செய்து பூஜை நடந்தது. சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதேபோல், சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி ஊர்வலமும் நடந்தது.

இதேபோல், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில், பெரமனூர் மாரியம்மன், நாலுகால் மண்டபம் முத்துமாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன், அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முனியப்பன் கோவிலும்

இதேபோல், சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளையும், 200-க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டு வழிபட்டனர்.

அதேபோன்று அய்யந்திருமாளிகை பூட்டு முனியப்பன் கோவிலில் சாமிக்கு ராஜ அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் சிலர் காளி உள்ளிட்ட பல்வேறு அம்மன் வேடமணிந்து சாமியாடிவாறு ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர். அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள சிறை முனியப்பன் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.


Next Story