புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.

நாமக்கல்

புரட்டாசி சனிக்கிழமை

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

வெங்கட்ரமண பெருமாள்

இதேபோல் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. அதேபோல் மணப்பிள்ளை வரதராஜ பெருமாள் கோவில், வளையப்பட்டி கஸ்தூரி மலை ரங்கநாதர் சாமி கோவில், தோழர் சர்வ மலை அலமேலு மங்கா ரங்கநாதர் சாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் உள்ள பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அதிகாலை முதல் பெருமாளை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தலைமலை சஞ்சீவி பெருமாள்

எருமப்பட்டி அருகே தலைமலை சஞ்சீவி பெருமாள் கோவில் உள்ளது. சுமார் 2,000 அடி உயரத்தில் மலைமீது உள்ள இக்கோவில் பழமை வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தலைமலை சஞ்சீவி பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இந்த கோவிலுக்கு திரளான பக்தர்கள் படி ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அம்மன் கோவில்களில்..

இதேபோல் பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன், எல்லையம்மன் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், நன்செய் இடையாறு மூங்கில்வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

குழந்தை வேலாயுத சாமி

வெண்ணந்தூரில் உள்ள ஸ்ரீ குழந்தை வேலாயுத சாமி கோவிலில் முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன் கோவில், சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு ்கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story