ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

அனுமன் ஜெயந்தி விழா

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில், அபயஹஸ்தா ஆஞ்சநேயர் கோவில், வைர ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலையில் ஆராதனை ஹோம பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலையில் மூலவர், உற்சவர், விசேஷ திருமஞ்சனம் அலங்காரம், கூட்டு பிரார்த்தனை, மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலையிலிருந்து இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். அப்போது அபயஹஸ்த ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் சேலம் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வீர ஆஞ்சநேயர் வெள்ளி கவசம் மற்றும் வடை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ராசிபுரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர்.

வடை மாலை

அதேபோல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள வைர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்திருந்து வைர ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் புதுப்பாளையம் ரோடு இ.பி. காலனி வலம்புரி விநாயகர் கோவில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் போக்குவரத்தை சரி செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சிறப்பு அலங்காரம்

பள்ளிபாளையம் பகுதியில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் கோவிலில் காலையில் அனுமனுக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தீர்த்தகம், தேன், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் எஸ்.பி.பி. காலனி முருகன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், பள்ளிபாளையம் காவிரி கரையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், காசி விசாலாட்சி கோவில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

வெற்றிலை மாலை அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் நல்லூரில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்று. ஆஞ்சநேயர் சாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று 108 அர்ச்சனைகள் செய்து கோவில் முன்புறம் திருக்கோவில் விளக்கு ஏற்றப்பட்டது. இதையடுத்து சாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் 108 வடை மாலை சாத்தப்பட்டு மலர்கள் மற்றும் வெற்றிலை மாலை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் நல்லூர், கந்தம்பாளையம், பெருமாபட்டி, கவுண்டிபாளையம், முசல் நாயக்கன்பாளையம், தொட்டியந் தோட்டம், காளியப்பனூர், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

செந்தூர காப்பு

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தின் முன்பு உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவைையொட்டி செந்தூர காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story