தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
x

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

தங்க கவசம்

மேலும் சுமார் 250 கிலோ எடை கொண்ட பூக்கள் சாமியின் மீது கொட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது.

இதையொட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நாமக்கல் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

இதேபோல் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பாலதண்டாயுதபாணி சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் தட்டாரத்தெரு ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில், கோட்டை ரோடு விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஹேரம்ப பஞ்சமுக விநாயகர்

இதேபோல் தமிழ் புத்தாண்டையொட்டி பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூர் பஞ்சமுக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி காய், கனிகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரங்களும் நடைபெற்றது. இதேபோல் பேட்டையில் உள்ள புது மாரியம்மன், பகவதி அம்மன், வேலூர் மகா மாரியம்மன், நஞ்சை இடையாறு மாரியம்மன், திருவேலீஸ்வரர், பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள்,

பழைய காசி விஸ்வநாதர் மற்றும் புதிய காசி விஸ்வநாதர், மாரியம்மன், பகவதி அம்மன், பச்சை மலை முருகன், கபிலர்மலை பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சாமி, பிலிக்கல்பாளையம் கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், பரமத்தி கோதண்ட ராமசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story