ஈரோட்டில் ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஈரோட்டில், ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு

ஈரோட்டில், ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி 3-வது வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி நேற்று ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீபம் ஏற்றி வழிபாடு

இதேபோல் வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் உள்ள சின்னமாரியம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அசோகபுரம் மழை மாரியம்மன், முத்தம்பாளையம் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பெண் பக்தர்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். ஈரோடு பெரியவலசு லால் பகதூர் நகரில் உள்ள விளையாட்டு மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில், கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், ஈரோடு -சத்தி ரோட்டில் உள்ள எல்லை மாரியம்மன் கோவில், சூரம்பட்டி பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story