கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


விஜயதசமியையொட்டி கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடைபெற்றது.

திருவாரூர்

குடவாசல்:

விஜயதசமியையொட்டி கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கூத்தனூரில் மட்டும் தான் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு திருப்பாத தரிசன நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்து நேற்று விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வித்யாரம்பம்

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நோட்டு, புத்தகம், பேனா, சிலேட் ஆகியவற்றை எடுத்து வந்து சரஸ்வதியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழா அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சரஸ்வதியை தரிசனம் செய்து நெல் மணிகளை அ.ஆ.இ எழுத்துகளை எழுதி வித்யாரம்பம் செய்வார்கள்.

அதன்படி நேற்று விஜயதசமி விழாவையொட்டி ஏராளமான குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து நெல்மணிகளில் அ, ஆ, இ எழுத்துக்களை சிறப்பு பூஜைகள் செய்து எழுதி (வித்யாரம்பம்) பழகினர்.

போலீசார் பாதுகாப்பு

இதில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மனோகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜோதிராமன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பா.முருகன், கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story