மடப்புரம், தாயமங்கலம், காரைக்குடி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம், தாயமங்கலம், கொல்லங்குடி மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம், தாயமங்கலம், கொல்லங்குடி மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அம்மன் வழிபாடு
ஆண்டுதோறும் தமிழ் மாதத்தில் வரும் ஆடி மாதம் என்பது ஆன்மிகம் மிகுந்த மாதமாகும். இந்த மாதத்தில் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். ஆடி மாதங்களில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், திருவிளக்கு பூஜைகளும் நடைபெறுவதும், கூழ் காய்ச்சி வழங்குவதும் வழக்கமாக இருக்கும். இந்தாண்டு ஆடி மாதத்தில் மொத்தம் 5 செவ்வாய்க்கிழமைகள், 4 வெள்ளிக்கிழமையும் வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளி மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகமாகவே காணப்பபடும். நேற்று ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நகரத்தார்கள் சார்பில் முத்தாலம்மன் கோவிலில் இருந்து ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பச்சை மஞ்சள் அபிஷேகம்
இதேபோல் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இனி வரும் அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பச்சை மஞ்சளை அம்மியில் அரைத்து மஞ்சள் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலையில் தொடங்கி வெள்ளிக்கிழமை மதியம் வரை நடைபெறுகிறது.