பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

சிவகங்கை

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் வரும் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டாள் சன்னதி முன்புறத்தில் தங்க கவசத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் அடைக்கம்மை ஆச்சி மற்றும் கோவில் செயல் அலுவலர் விநாயகவேல் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் இருந்து அரியக்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருக்கோஷ்டியூர்

தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் மூலவர் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் கள்ளழகர் வேடத்திலும் காட்சியளித்தனர். திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமியநாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்தார். இதில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரம்

சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

காரைக்குடி அருகே உள்ள சிவஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story