பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி

துறையூர்:

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகரில் உறையூர் நாச்சியார் கோவில், புத்தூர் ஆதிவராக பெருமாள் கோவில், பொன்மலை விஜயராகவ பெருமாள் கோவில், கே.கே.நகர் இந்திராநகர் சீனிவாச பெருமாள் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில், தலைமை தபால் நிலையம் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

துறையூர்

துறையூர் அருகே பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் துறையூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் மலையில் ஏறி வழிபட்டனர்.

பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மலைப்பாதையில் பல்வேறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதையறிந்த செயல் அலுவலர் வேணுகோபால் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து மலைப்பாதையில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டு, சீரமைக்கப்பட்டது. முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் தரிசனம்

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், கோபுரப்பட்டி ஆதிநாயகபெருமாள் கோவில், அழகியமணவாளம் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தா.பேட்டை

தா.பேட்டை அருகே நீலியாம்பட்டி கிராமத்தில் தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் மற்றும் அடிவாரத்தில் உள்ள பூமிதேவி, நீலாதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் கரடு, முரடான மலைப்பாதையிலும் பக்தர்கள் நடந்து சென்று சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தா.பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி, உத்தண்டம்பட்டி கிராமத்தில் பூமாதேவி, நீலாதேவி சமேத கலியுக ராஜகோபால் சுவாமி, பிள்ளாபாளையம் கிராமத்தில் நரசிங்க பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story