பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Oct 2023 1:15 AM IST (Updated: 1 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி நாச்சிமுத்து வீதியில் உள்ள நாகதேவ செல்வகணபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகெண்டு தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார, பூஜைகள் நடைபெற்றது.

மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியில் உள்ள சுயம்பு ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி அங்கலகுறிச்சி அருகே கோபால்சாமி மலையில் வீற்றிருக்கும் நந்தகோபாலசாமி கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நந்தகோபாலசாமி, பாமா, ருக்குமணியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி திரளான பக்தர்கள் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இதேபோன்று டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story