பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெங்கடரமண சுவாமி கோவில்
கரூர் தாந்தோன்றிமலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 18-ந் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிலையில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று அதிகாலையில் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சாமி தரிசனம்
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் கரூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா.. கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர். கோவிலில் பொதுதரிசனத்துக்கும், கட்டண தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் தெப்பக்குளம் அருகே உப்பு, மிளகு வைத்து சூடம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். மேலும் கோவிலை சுற்றி ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு பஸ்கள்
பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பை முன்னிட்டு ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாதபடி பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்களின் நலன் கருதி கரூரில் இருந்து தாந்தோன்றிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
குளித்தலை
குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவ பெருமாள் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கண்ணாடி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி,பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமிக்கு மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.