பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 7 Oct 2023 9:45 PM GMT (Updated: 7 Oct 2023 9:46 PM GMT)

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

பெருமாள் கோவில்

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு தாமரை மலர் பீடம் மீது ஆதிஷேசன் குடை பிடித்து அமர்ந்த வைகுண்ட நாதர் போன்று சிறப்பு அலங்காரத்தில் செய்யப்பட்டிருந்து.

இந்த அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என்ற கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள தொட்டராயர் பெருமாள் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

கம்பம் வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில், புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி வேணுகோபால கிருஷ்ணன் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர். கம்பம் கே.கே.பட்டி ரோடு, மாலையம்மாள்புரம், யாதவர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. கம்பம் கம்பராய பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு வழிபாடு

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும், வரதராஜ பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் முத்தங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடப்பட்டது. 5 மணிக்கு கால சாந்தி பூஜை, நட்சத்திர தீபம் காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்திலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அப்போது உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கிருஷ்ணர்- ராதைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கூத்த பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story