பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வந்தவாசி
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள விஜயராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-ம் சனிக்கிழமை மற்றும் அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் சாமிக்கு புதிய வஸ்திரம் சாற்றி மூலவர், கருடாழ்வார், ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பாகவதர்கள் திவ்ய பிரபந்தம் பாடல்கள் பாடி, உலக நன்மைக்காக அர்ச்சனை மற்றும் பிராத்தனை செய்து கற்பூரம் ஆர்த்தி காட்டினர்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கியவாறு தரிசனம் செய்தனர். இதில் சிறுவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 4ம் சனி விழாவையொட்டி அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி கருவறை வரதராஜரை குருவாயூரப்பனாக அலங்கரித்து இருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கொசப்பாளையம் பகுதியில் உள்ள கில்லா அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலிலும், ஷராப் பஜார் பெருமாள் தெருவில் உள்ள ராமர் பஜனை கோவிலிலும் புரட்டாசி 4-ம் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னத்தால் அலங்கரித்து திருப்பாவாடை சேவை நடைபெற்றது.
இதேபோல் இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில், எஸ்.வி.நகரம் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 4-ம் சனிக்கிழமை விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.