பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் உற்வசர் மதனகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி வீதிஉலா நடந்தது. இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இரவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது.
இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மலையில் உள்ள பூ மலை சஞ்சீவிராயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.