சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சுவாமிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தேவர்கள் வழிபாடு செய்வதாக கருதப்படுவதால் இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். பன்னிரு திருமுறைகள் அருளிச்செய்த 63 நாயன்மார்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களும், சமயக்குரவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுமான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களை போற்றும் வகையில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நால்வருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வேத பாராயணம் மற்றும் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நால்வர் உற்சவர் திருமேனிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகார உலா மங்கல இசையுடன் நடைபெற்றது. விழாவில் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.