ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அனுமன் ஜெயந்தி விழா
அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் அமாவாசை திதியிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை 06.30 மணி முதல் நேற்று மாலை 4.27 வரை அமாவாசை திதி நீடித்தது. அனுமன் ஜெயந்தியையொட்டி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், உலகில் உள்ள அனைத்து மக்களின் தோஷ நிவர்த்திக்காகவும் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜ அலங்காரம்
அனுமன்ஜெயந்தியான நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியும், அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் பவனி வருவது போல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10,008 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (சனிக்கிழமை) காலை திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், 10,008 ஜாங்கிரி மாலை சாற்றுபடி வைபவமும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பிரேமா ராமச்சந்திரன், ரமேஷ், பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்ற செந்தாமரை கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
வீதிஉலா
இதுபோல் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் லட்சத்து 8 வடமாலை, 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு ஆஞ்சநேயர் வீதிஉலா நடைபெற்றது. மேலும் பொன்மலையில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் கோவில், மேலூர் ஆஞ்சநேயர் கோவில், தில்லைநகர் வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீரங்கம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் மற்றும் மகாஅபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலையில் 10,008 வடைகள் கோர்க்கப்பட்ட மாலையும், மாலையில் 10,008 ஜாங்கிரி கோர்க்கப்பட்ட மாலையும் ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
முசிறி
முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, வடமாலை சாற்றப்பட்டு காட்சியளித்தார். பின்னர் மாலை வெண்ணை காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதே போன்று அக்ரஹார காவிரி கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல் திருவெறும்பூர் ெரயிலடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தா.பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில்உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, காட்டுப்புத்தூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பத்மாவதி ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ராமண பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி கோவிலில் உள்ள 12 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் முதலான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. வெண்பட்டாடை அணிவிக்கப்பட்டு, வெற்றிலை, எலுமிச்சை, மலர்களால் ஆன மாலைகளால் அலங்கரிகப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.