விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 296 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 296 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சதுர்த்தி விழா

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நாகையில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டது.

சிறப்பு வழிபாடு

இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், மாவடி பிள்ளையார், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர், சிறைமீட்ட அய்யனார் கோவிலில் உள்ள மகாகணபதி உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

296 சிலைகள் பிரதிஷ்டை

ஆரிய நாட்டு தெரு, தாய் மூகாம்பிகை கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மேலும் வீடுகள் தோறும் களிமண்ணால் ஆன சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து தேங்காய், பழம், பூ, வெற்றிலை, விநாயகருக்கு உகந்த அருகம்புல், எருக்கம்பூ மாலை, பொறி, கடலை உள்ளிட்டவைகளுடன் படையலிட்டு வழிபட்டனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று முழுவதும் 296 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் நாகை சக்தி விநாயகர் குழு சார்பில் 98 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கடலில் கரைக்கப்படுகிறது.

அச்சம் தீர்த்த விநாயகர் கோவில்

வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, இளநீர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் கோவில் விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி, இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வேதாரண்யம் போலீஸ் சரகத்தில் 35 இடங்களிலும், கரியாப்பட்டினம் சரகத்தில் 35 இடங்களிலும், வேட்டைக்காரன் இருப்பு சரகத்தில் 13 இடங்களிலும் என மொத்தம் 83 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

32 அடி உயர விநாயகர் சிலை

நாகை நீலாயதாட்சி அம்மன் சமேத காயாரோகண சாமி கோவிலில் 32 அடி உயரத்தில் அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக 1½ அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து நேற்று இரவு, 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. முன்னதாக நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பு யாகபூஜைகள் நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கோவில் முன் தொடங்கி நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சாலை, காடம்பாடி, பால் பண்ணைச்சேரி வழியாக நாகூர் வந்தது.

700 போலீசார் பாதுகாப்பு

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தை வந்தடைந்ததும் விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் சிலை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்படும். ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிலிப் கென்னடி ஆகியோர் மேற்பார்வையில் 700 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story