விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்கடஹர சதுர்த்தி
திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி மாலை 4.30 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன்பிறகு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்று தங்க ரதத்தில் சாமி வலம் வருதல் நடந்தது.
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், வாணிவிலாஸ்மேடு கலைக்கோட்டு விநாயகர் கோவில், நேருஜி நகர் நவசக்தி விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோபால்பட்டி
கோபால்பட்டி கற்பகாம்பாள்-கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அருகில் உள்ள விநாயகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு அருகம்புல், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மாலைகளை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.