விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நெல்லையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நெல்லையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், விநாயகர் சிலைக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டனர்.
நெல்லை மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் தனி சன்னதியுடன் 7 நிலைகளுடன் ராஜகோபுரம் கொண்ட பெரிய கோவில் ஆகும். இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று அதிகாலையில் ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி தங்க கவசத்தில் எழுந்தருளிய விநாயகரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
சிறப்பு வழிபாடு
நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவிலில் வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தியாகராஜ நகரில் உள்ள விக்ன விநாயகர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நெல்லை- மதுரை ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பூ பூஜைகள் நடைபெற்றது.
242 இடங்களில் சிலைகள்
இதுதவிர இந்து அமைப்புகள் சார்பில் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் வைத்துள்ளனர். நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 242 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஒருசில இடங்களில் அனுமதி பெறுவது தொடர்பாக போலீசாருக்கும், சிலை அமைப்பு குழுவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
வீடுகளில் பூஜை
இதுதவிர பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். விநாயகருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அவல், பொரி போன்றவற்றை படையலிட்டு வழிபட்டனர்.