அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவை
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள அம்மன் கோவில்களில சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் பக்தர்கள்காலை முதலே அம்மன் கோவில்களில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் வரிசையாக சென்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
திரவிய அபிஷேகங்கள்
ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை கோனியம்மனுக்கு அதிகாலை நேரத்தில் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பெண்கள் வணங்கி சென்றனர். தொடர்ந்து நேற்று இரவு கோனியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் கோவை அவினாசிரோடு உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. கோவை பெரியகடைவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு 508 பட்டுப்புடவைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
வளையல் அலங்காரம்
கோவை ராஜசெட்டியார் வீதியில் உள்ள வனபத்ரகாளியம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களை கொண்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த பகுதியை சேர்ந்த பெண்கள்காலைமுதல் அம்மனை வழிபட கோவிலில் குவிந்தனர். புலியகுளம் மாரியம்மனுக்கு அரளி பூ, மல்லி பூ, தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கோவை சங்கனூர் சாலையில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமதே முத்தாரம்மனுக்கு நேற்று காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டனர். இதேபோல் வைசியாள் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்மேரி அம்மன் கோவில், தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவில், காட்டூர் மணிமுத்து மாரியம்மன் கோவில், ஒலம்பஸ் முக்தியம்மன் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், 108 விநாயகர் கோவிலில் உள்ள துர்க்கையம்மன் என அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.