அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 28 July 2023 7:00 PM GMT (Updated: 28 July 2023 7:00 PM GMT)

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர்

கோவை

ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெரியக்கடை வீதி அம்மனுக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடி மாத பூஜை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். அதன்படி ஆடி 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை முதல் கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். கோனியம்மனுக்கு காலையில் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

2 டன் பழங்களால் அலங்காரம்

கோவை ஆர்.எஸ்.புரம் லைட்ஹவுஸ் மைதானத்தில் உள்ள புகழ்பெற்ற காளியம்மனுக்கு சிங்க வாகன அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிங்க வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மனை அந்த பகுதி பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபட்டனர். கோவை பெரியகடை வீதியில் உள்ள கோவிலில் மாகாளியம்மனுக்கு ஆப்பிள், கொய்யா, மாதுளை, மாம்பழம், பலா, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் ராஜசெட்டியார் வீதியில் வீற்றிருக்கும் வன பத்ரகாளியம்மனுக்கு ஏலக்காய்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புலியகுளம் மாரியம்மனுக்கு மலர் அலங்காரமும், காட்டூர் மணி முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஒலம்பஸ் அங்காளம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சில கோவில்களில் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தை முன்னிட்டு கோவை தண்டு மாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story