ஆடி 3-ம் வெள்ளி:அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி 3-ம் வெள்ளி:அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரம்


ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி, விழுப்புரம் மந்தகரையில் உள்ள அமச்சியாரம்மன் கோவிலில் நடந்த விழாவில், அம்மனுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

முத்துமாரியம்மன்

இதேபோல் விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு பூந்தோட்டம் ஏரிக்கரையில் கரகம் ஜோடித்து வீதிஉலாவாக எடுத்து செல்லப்பட்டது. மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், ஒரு கொப்பறையில் ஊற்றி வார்க்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மேல் கும்பம் கொட்டுதலும், 8 மணிக்கு சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.

நாகம்மன் கோவில்

விழுப்புரம் காணை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-ம் வெள்ளியையொட்டி காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விழுப்புரம் விராட்டிக்குப்பத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் காலை 7.30 மணிக்கு மேல் கரகம் பூஜை செய்து மதியம் 1 மணியளவில் சாகை வார்த்தலும், மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, இரவு 9 மணியளவில் சாமி வீதியுலா நடைபெற்றது.

ஏழைமாரியம்மன்

இதேபோன்று, விழுப்புரம் எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள வைரம் முத்து மாரியம்மன் கோவில், விழுப்புரம் ஊரல் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில், பாப்பான்குளத்தில் உள்ள ஏழை முத்துமாரியம்மன் கோவில் என்று பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து, அம்மன் வீதிஉலா நடைபெற்றது.


Next Story