அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

3-வது வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்பு தீபம் ஏற்றி பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். நேற்று மாலை தங்கத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாங்கல்யம்- வெற்றிலை அலங்காரம்

இதேபோல் கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மாங்கல்ய கயிற்றால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திருமாநிலையூரில் உள்ள பகவதி அம்ம, வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் தாந்தோன்றிமலையில் உள்ள ஊரணி காளியம்மன், முத்துமாரியம்மன், வேம்பு முத்துமாரி அம்மன், வேம்பு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்- நொய்யல்

வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நஞ்சை புகழூர் அக்ரஹாரத்தில் அமைத்துள்ள ஸ்ரீ அஷ்டதசா பூஜா மகாலட்சுமி துர்கா தேவி அம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


Next Story