அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

ஆடி 4-வது வெள்ளி

தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன்படி தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரேணுகாம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டைமாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பச்சையம்மன் கோவில்

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைவழிபட்டனர்.

இதேபோல் ஒட்டப்பட்டி சக்தி பீடம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோன்று கொளகத்தூர் பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுஅம்மனை வழிபட்டனர்.

கரும்பு அலங்காரம்

தர்மபுரி செந்தில் நகரில் உள்ள புற்று நாகர்கோவிலில் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோன்று கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கரும்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல் ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story