அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது

திருவாரூர்

மன்னார்குடி உப்புக்கார தெரு முத்து மாரியம்மன் கோவில் 104-வது ஆண்டு ஆவணி பெருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி முத்து மாரியம்மன் பல்வேறு அலங்காரங்களில் தாமரை, சூரிய பிரபை, காமதேனு, அன்ன வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்றார். ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்தும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை

இதேபோல திருமக்கோட்டையில் உள்ள அம்மன் கோவில்களில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பொன்னியம்மன், அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மகாமாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.


Next Story