கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதி  கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர்

சித்ரா பவுர்ணமியையொட்டி கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சிற்றம்பலம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் அருகே உப்புவிடுதி காலனி பகுதியில் உள்ள சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உப்பு விடுதி ஆதிபராசக்தி கோவிலில் உலக நலனுக்காக சிறப்பு அபிஷேகமும், அன்னதான விழாவும் நடைபெற்றது. அதேபோல் அக்னி காளியம்மன் கோவில், புனல்வாசல் ஜமீன் வாடிக்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அலிவலம் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால்குட ஊர்வலம்

திருச்சிற்றம்பலம் பெரியான் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள அரசமரத்து பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு சென்று கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தாரர்களும், திருச்சிற்றம்பலம் பெரியான் தெரு கிராம மக்களும் செய்திருந்தனர்.

இளநீர் அபிஷேகம்

கும்பகோணம் மடத்து தெரு பகுதியில் உள்ள பகவத் விநாயகர் கோவிலில் உள்ள மூலவருக்கு ஆயிரத்து 8 இளநீரை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். இதே போல் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில், கரும்பாயிரம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளி பல்லக்கில் சாமி வீதிஉலா

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று வெண்ணைத்தாழி வெள்ளி பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி மேற்பார்வையில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இன்று( சனிக் கிழமை) காலை 8 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.


Next Story