முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கந்தசஷ்டி விழாவையொட்டி தஞ்சையில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு வழிபாடு
திருப்புகழில் குறிப்பிடப்படும் ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எவ்வாறு எழுந்தருளி உள்ளாரோ? அதே போல் தஞ்சை மாநகரில் உள்ள 6 கோவில்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கந்தசஷ்டி விழாவையொட்டி தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விபூதியாலும், மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பாலதண்டாயுதபாணி கோவில்
இதேபோல் தஞ்சை மேலஅலங்கம் சுப்பிரமணியசுவாமி கோவில், வடக்குஅலங்கம் பாலதண்டாயுதபாணி கோவில், குறிச்சிதெரு பாலதண்டாயுதபாணி கோவில், ஆட்டுமந்தைத்தெரு சுவாமிநாத சுவாமி கோவில், சின்னஅரிசிக்காரத்தெரு பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.