முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

திருநெல்வேலி

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

வைகாசி விசாகம்

முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு ஹோம பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பன்னிரு திருமுறை வாசிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

நெல்லை சந்திப்பு பாளையஞ் சாலை குமாரசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட ஏராளமான முருகன் கோவில்களில் ஹோம பூஜைகள், சிறப்பு தீபாராதனை, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

நேற்று இரவு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், செப்புத்தேரில் சண்முகரும், வெள்ளி மூஞ்சுரு வாகனத்தில் விநாயகரும் 4 ரத வீதிகளில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சிவன்கோவில்களில் உள்ள முருகன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சேரன்மாதேவி- வள்ளியூர்

சேரன்மாதேவி கொழுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று வைகாசி விசாக விழா மற்றும் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் விமானத்திற்கும் மூலவருக்கும் வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் உற்சவர் உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர சேரன்மாதேவி பஸ் நிலையத்திலிருந்துஇருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.

இதேபோல் அத்தாளநல்லூர் விசாக கட்டளை மடம் இணைந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

வள்ளியூர் முருகன் கோவிலில் காலையில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்பு பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் மற்றும் காவடி எடுத்து கிரிவலப் பாதையில் மேள தாளம் முழங்க ஊர்வலமாக வலம் வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு காலையிலும், மதியமும் வேலவன் பாதயாத்திரை குழு சார்பிலும் மாலையில் வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் பக்தர்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி மற்றும் அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story