சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்

பிரதோஷ வழிபாடு

மகா பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

இதேபோல் பழனி மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெரியாவுடையார் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில், அடிவாரம் வேளீசுவரர் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் மகா பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரம், அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 11 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நந்தீஸ்வரர் முன்பு விளக்கேற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வடமதுரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேசுவரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேசுவரரும், நந்தியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதேபோல் அய்யம்பாளையம் அருள் முருகன் கோவில், மலையடிவாரத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில், சோழிசுவரர் கோவில், காந்திபுரம் சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story